பி பிரிவு களேபரம்
உலக கோப்பையில் லீக் சுற்று முடிந்து நாக்-அவுட் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. ஏ பிரிவில் பெரிய அணிகள் பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் கால் இறுதியை உறுதி செய்ய, பி பிரிவில் ஒரே களேபரம். கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் மரணப் போராட்டமாக இருந்தன.
இந்தியா நான்கு ஆட்டத்தில் ஏழு புள்ளிகள் எடுத்ததுமே கால் இறுதியில் கால் வச்சாச்சு என்று டிக்ளேர் செய்தது பேக் பயர் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தென் ஆப்ரிக்காவுடன் நடந்த லீக் ஆட்டத்தில் நம்மவர்கள் சொதப்பியதை நம்பவே முடியவில்லை. சேவக் – சச்சின் அதைத் தொடர்ந்து சச்சின் – கம்பீர் அமர்க்களமாக ரன் குவிக்க 400 ரன் அடிப்பாங்கப்பா என்று ரசிகர்கள் கால்குலேட்டர் இல்லாமலே கணக்கு போட்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிக்சர் மட்டுமே அடிப்போம் என்று பிடிவாதமாக இருந்த இந்திய வீரர்கள் 29 ரன்னுக்கு கடைசி? 9 விக்கெட்டுகளை தாரை வார்த்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனர். அப்படியும்… 297 ரன்னை சேஸ் செய்ய முடியாதுப்பா என்று ரசிகர்கள் தெம்பாகவே இருந்தனர். தென் ஆப்ரிக்காவும் விடாக்கண்டனாக விரட்ட நமக்கு கண்ணைக் கட்டியது. கடைசி ஓவரில் நெஹ்ரா சிக்சரும் பவுண்டரியுமாக போட்டுக் கொடுத்து நெருங்கி வந்த வெற்றியை விரட்டி அடித்தார். சச்சினுக்காக கோப்பையை வெல்வோம் என்று சபதம் செய்த வீரர்கள், அவர் அற்புதமாக சதம் அடித்த போட்டியில் சொதப்பலாக விளையாடி அணியை கவிழ்த்ததை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் புலம்பினர்.
சென்னையில் வெஸ்ட் இண்டீசுடன் நடந்த வாழ்வா சாவா லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து கடைசி வரை போராடி ஜெயித்து தொலைக்க, பி பிரிவில் குடுமிப்பிடி சண்டை உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த அணி அந்த அணியை ஜெயித்தால், அந்த அணி இந்த அணியிடம் தோற்றால்… அப்புறம் ரன் ரேட் கணக்கு என்று தலையை சுற்றி மூக்கைத் தொட முயற்சித்ததில் அணிகள் மூச்சு வாங்கி மூர்ச்சையாகாத குறைதான். கத்துக்குட்டி அணிகளும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் கவுரவமாக விளையாடி, அடுத்த உலக கோப்பையிலும் தங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம் என்று அப்ளிகேஷன் போட்டுள்ளன. ஐசிசி கருணை காட்டுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
கடைசி கட்ட லீக் சுற்றில் அனல் பறந்ததால் நாக் அவுட் ஆட்டங்களில் சுனாமியை எதிர்பார்க்கலாம். இனி ஒவ்வொரு ஆட்டத்திலும் உயிரைக் கொடுத்து விளையாடினால்தான் கரை சேர முடியும். டோனியின் பிராப்ளமே இதனை இதனால் இவன் முடிக்கும் என்று… சரியாகக் கணித்து வீரர்களை வேலை வாங்குவதில்தான் இருக்கிறது. ரெய்னா, அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா என்று ரசிகர்கள் கதறாத குறை. 6 பேட்ஸ்மேன் 5 பவுலர் என்று பார்முலாவை மாற்றிப் பார்க்கலாம்… என்றாலும் சோதனை முயற்சிகளுக்கான காலம் கடந்துவிட்டது. சிறிய தவறுக்கு கூட இடமில்லை. எல்லாம் நன்றாகவே முடியும் என நம்புவோம்.
இந்த உலக கோப்பையுடன் கனடாவின் ஜான் டேவிசன், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயிப் அக்தர் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர். அடுத்த வாரத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். தோற்கும் கேப்டன்களின் தலைகள் உருள்வது நிச்சயம். வங்கதேசத்தின் மிர்பூரில் இரண்டு கால் இறுதி ஆட்டங்கள், அகமதாபாத் மற்றும் கொழும்புவில் தலா ஒன்று. கொழும்பு, சண்டிகரில் அரை இறுதி. ஏப்ரல் 2ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மெகா பைனல். சாதனை நாயகன் சச்சின் கைகளில் உலக கோப்பையை ஒப்படைக்கும் பொறுப்பை சக வீரர்கள் நிறைவேற்றுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
- பா.சங்கர் (குங்குமம் இதழில் வெளியானது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக