வியாழன், 10 மார்ச், 2011

பேட்டிங் ஸ்டிராங்கு… பவுலிங் வீக்கு…


இந்தியா காமெடி பீஸா?

மூன்றாவது சுற்று லீக் ஆட்டங்கள் முடிந்து எல்லா அணிகளும் அரை கிணறு தாண்டியுள்ள நிலையில், கோப்பையில் சூறாவளி வீசத் தொடங்கியிருக்கிறது. சரிசமன், ஹாட்ரிக், அதிர்ச்சி தோல்வி, அதிரடி சதம், டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு, சூதாட்ட புகார் என்று சுவாரசியங்களின் அணிவகுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் திக்குமுக்காடிக் கொண்டுள்ளனர்.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா – இங்கிலாந்து மோதிய லீக் ஆட்டம்… சச்சின் சாதனை சதம் விளாசியதில் இந்தியா 338 ரன் குவித்தது. வெற்றி உறுதி என்று ரசிகர்கள் மட்டுமல்ல வீரர்களும் அசட்டையாக இருந்தது ஆபத்தாகிப் போனது. ஸ்டிராஸ் – பெல் ஜோடி கொடுத்த பதிலடியில் இந்திய பந்துவீச்சு மூச்சு வாங்கியது. கவுத்துட்டாங்கய்யா…என்று ரசிகர்கள் நடையைக் கட்டத் தொடங்க, ஜாகீர் திடீரென்று விக்கெட்டுகளை சாய்த்து உயிரூட்டினார். மீண்டும் வெற்றிக் காற்று இந்தியா பக்கம். அப்படியா? என்று வெளியே போன ரசிகர்கள் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், சிக்சராக போட்டுக் கொடுத்து சாகடித்தார் சாவ்லா. முனாப் வீசிய கடைசி ஓவரின் 3வது பந்தில் சிக்சர் பறக்க கதை கந்தல். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட, இங்கிலாந்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை சரிசமனில் முடித்தது.

இந்தியா பேட் செய்தபோது ஒரு பந்தை மிச்சம் வைத்து ஆல் அவுட் ஆனதுடன், முனாப் கிரீசைத் தொடாமல் ஓடியதால் ஒரு ரன் கணக்கில் சேராமல் போனது. அந்த ஒரு ரன் இருந்திருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும் என்று ரசிகர்கள் புலம்ப, ஒரு புள்ளியாவது கிடைத்ததே என்று இரு அணி கேப்டன்களும் திருப்திபட்டனர். இந்திய பவுலர்கள் இப்படி போட்டுக் கொடுத்தால் கோப்பை வாய்ப்பு அம்பேல் என்று எச்சரிக்கிறார் கபில். பேட்டிங் ஸ்டிராங்கு… பவுலிங் வீக்கு… என்று ரசிகர்கள் காமெடி பண்ணிக் கொண்டிருந்தாலும் இந்திய அணியின் ரேட்டிங் அப்படியே மெயிண்டெய்னாவது அதிசயம்.

இரண்டே நாள் இடைவெளியில் பெங்களூரில் அடுத்த ஆட்டம். இந்த முறை இங்கிலாந்துடன் மோதியது பங்காளி அயர்லாந்து. டிராட் – பெல் அசத்தியதில் இங்கிலாந்து 327 ரன் குவித்தது. அயர்லாந்து பேட்டிங்கில் 111 ரன்னுக்கு 5 விக்கெட் காலி. இங்கிலாந்து வெற்றி பற்றி யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் கணக்கு மட்டும் வேறாக இருந்தது. எவனா இருந்தாலும் அடிப்பேன் என்று அவர் ஆடிய ருத்ரதாண்டவத்தில் இங்கிலாந்து வீரர்கள் மயக்கம் போடாத குறை. போதாக்குறைக்கு கெவின் கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டு தலையில் கை வைத்தார் ஸ்டிராஸ். யார் தலையில் கை வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்த அதிர்ச்சி தோல்வி, அப்போதே இங்கிலாந்தை குறி வைத்துவிட்டது. கோப்பையையே வென்றது போல அயர்லாந்து வீரர்கள் ஆர்ப்பரித்து அமர்க்களப்படுத்தினார்கள். கேலரியில் அமர்ந்து கெவின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

2007 உலக கோப்பையில் அயர்லாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்திய ஆட்டத்தில் அண்ணன் நியால் ஓ பிரையன் ஆட்டநாயகன். இப்போது இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த ஆட்டத்தில் தம்பி கெவின் ஓ பிரையன் ஆட்டநாயகன். அதிலும் கெவின் 50 பந்தில் அடித்த சதம் உலக கோப்பையின் அதிவேக சதமாக பதிவாகி இருக்கிறது. இதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? என்று நெகிழ்ந்த தந்தை பிரெண்டனும் அயர்லாந்து அணிக்காக 52 போட்டியில் ஆடியிருக்கிறாராம். அயர்லாந்தின் இந்த வெற்றி கத்துக்குட்டி அணிகள் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.

நெதர்லாந்துடன் டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசின் கெமார் ரோச் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்திய 24 மணி நேரத்துக்குள்ளாகவே 2011 உலக கோப்பையில் 2வது ஹாட்ரிக் பதிவாகிவிட்டது. இலங்கையின் மலிங்கா புயல் தாக்கியதில் கென்யா கூடாரம் தரைமட்டமானது. கனடா அணியிடம் 184 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன பாகிஸ்தானை, அதிர்ச்சி தோல்வியில் இருந்து காப்பாற்றினார் கேப்டன் அப்ரிடி. விக்கெட் வேட்டையில் அவர்தான் லீடிங். சூதாட்ட சர்ச்சையில் ஆஸ்திரேலியாவின் வாட்சன், ஹாடின், இலங்கையின் ஜெயவர்தனே, சமரவீரா ஆகியோர் பெயர் அடிபட, ’அப்பாடி… எங்க பிளேயர்ஸ் மேல எந்த கம்ப்ளெயிண்டும் இல்ல’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ். ஏ பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி ஆட்டத்தை இலங்கை அல்லது வங்கதேசத்தில் ஆட வேண்டும் என்று கணக்கு போடுகிறார் அப்ரிடி. இந்தியாவில் ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது என்பதுதான் காரணம். ’கால் இறுதி நாக் அவுட் போட்டி என்பதால் அப்ரிடியின் ஆசை நியாயமானதே. அரை இறுதி, பைனலை இந்தியாவில் ஆடுவது பிரச்னையாக இருக்காது. அதற்குள் பாகிஸ்தான் வீரர்கள் நன்றாக செட்டிலாகி இருப்பார்கள்’ என்று சப்போர்ட் செய்கிறார் அக்ரம். அவர்கள் கவலை அவர்களுக்கு. டோனி கோப்பையை தூக்கி முத்தமிடும் வரை நமக்கு தூக்கம் வராது.

பா.சங்கர் 


(குங்குமம் இதழில் வெளியானது) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக