செவ்வாய், 10 மே, 2011

கலக்குறாங்க சென்னை பசங்க


அதிர்ஷ்டம் ஸ்டாக் அவுட் ஆயிடுச்சு… நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பேல் என்ற கணிப்பை வழக்கம் போலவே தகர்த்திருக்கிறார் டோனி. புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே 2வது இடத்துக்கு ஜம்ப் செய்ய, ‘எல்லாம் மச்சம்பா’ என்கிறார்கள் மீண்டும்!
பெரிய கனவோடுதான் சேப்பாக்கத்தில் கால் வைத்தது புனே வாரியர்ஸ். யுவராஜ் டாசில் ஜெயித்து சேஸ் செய்ய முடிவு செய்தது எதிர்பார்த்ததுதான். ஹஸி, விஜய், டோனி ஓரளவு தாக்குப்பிடிக்க சிஎஸ்கே 142 ரன் எடுக்க… வாரியர்ஸ் போட்டுத் தாக்கிவிடும் என்றே தோன்றியது.
உள்ளூர் ரசிகர்களின் உசுப்பேற்றலில் சிலிர்த்தது சூப்பர் கிங்ஸ். துல்லியமான பந்துவீச்சும் துடிப்பான பீல்டிங்கும் செம கிளாஸ். சூறைத் தேங்காய பொறுக்குற மாதிரி நம்ம பாய்ஸ் சும்மா பாய்ஞ்சு பாய்ஞ்சு புடிச்சத நம்பவே முடியவில்லை. யுவராஜ் மட்டும் கொஞ்சம் போராடி பார்த்தார். பாவம், சென்னையோட சூட்டில் தொங்கிப் போனவர் ‘முடியல’ என்று ஒதுங்கிக் கொண்டார். மார்க்கெல், போலிஞ்சர், அஸ்வின் பவுலிங் அற்புதமாக இருந்தது. நெருக்கடியான ஆட்டத்தில் வென்ற திருப்தி டோனி முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது ஆச்சரியம்! கேலரியில் திருமதி டோனியின் ஆர்ப்பாட்டம் அழகான அமர்க்களம்.
ஒரே நாள் இடைவெளியில் மீண்டும் வாரியர்சுடன் மோதல். இந்த முறை அவங்களோட குகையில். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் டீம்… சேப்பாக்கத்துக்கு வெளியே பாச்சா பலிக்காது என்ற அவப் பெயரை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்ற வெறியோடு விளையாடியது சிஎஸ்கே. யுவராஜ், உத்தப்பா அதிரடியில் வாரியர்ஸ் 141 எடுத்தது. சேசிங்கில் ஹஸி ஆரம்பத்திலேயே ஒதுங்கிக் கொண்டாலும் விஜய், பத்ரி, ரெய்னா அட்டகாசம் செய்தனர். பத்ரியோட அதிரடி ஆட்டம் யாருமே எதிர்பார்க்காதது. வீழ்வதெல்லாம் எழுவதற்கே என்று மீண்டும் நிரூபித்துள்ளது சிஎஸ்கே.
சீசன் 4 ரன் குவிப்பு டாப் 10ல் பத்ரி, விஜய் இடம் பிடித்திருப்பது பெரிய விஷயம். மற்ற அணிகளில் மும்பை இந்தியன்ஸ் டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறது. நான்காவது வெற்றிக்கு குறி வைத்த கொச்சி டஸ்கர்ஸ், இஷாந்த் புயலில் சிக்கி சின்னாபின்னமானது. டேர்டெவில்ஸ் நிலைமைதான் கவலைக்கிடம். எதுவுமே ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் சேவக். பின்தங்கியுள்ள அணிகள், இரண்டாவது பாதியில் ஈடுகட்டி விடலாம் என்ற நம்பிக்கையோடு உள்ளன.
தேர்வுகள் முடிந்து ஹாலிடே மூடு வந்திருந்தாலும், டிவி ரேட்டிங்கில் ஐபிஎல் சூடு பிடிக்காதது டூ மச் ஆப் கிரிக்கெட் என்ற சலிப்புணர்வை காட்டுகிறது என்றே தோன்றுகிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த சீசனை விட 22 சதவீதம் குறைந்திருக்கிறதாம். லீக் சுற்றின் கடைசி கட்டத்தில் இருந்துதான் ரசிகர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்கிறார்கள்.
‘ஒப்பந்தத்தில் இருப்பதை விட குறைவான போட்டிகளில் விளையாடுகிறோம். அதனால், முதல் ஆண்டுக்கான தொகையில் 75 சதவீதம் மட்டுமே கட்டுவோம்’ என்று புதிய அணிகளான புனே, கொச்சி முரண்டு பிடிக்க, அதெல்லாம் நடக்காது… முழுசா எடுத்து வையுங்க என்று கிரிக்கெட் வாரியம் கறாராக சொல்லி இருக்கிறது. இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்காக 10 இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உள்ளதால், அவர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்வதில் அணிகள் ரொம்பவே பிஸி. அரை இறுதி வாய்ப்பு யாருக்கு என்பதும் அடுத்த வாரத்தில் தெளிவாகி விடும்.

பா.சங்கர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக