செவ்வாய், 10 மே, 2011

வீறுகொண்டார் வீரு… உள்ளூரில் சிஎஸ்கே விர்ரு!


‘நாக் அவுட்’ சுற்று நெருங்குவதால் எல்லா அணிகளும் ஜுர வேகத்தில். டாப் கியரில் ஓடிக் கொண்டிருக்கும் மும்பை, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு அதிகம். டி20ல் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் மற்ற அணிகளையும் ஒதுக்கிவிட முடியாது. புனே மட்டும் கடைசி இடத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில் உறுதியாக இருக்கிறது.
உள்ளூர் ராசி இந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று டோனி கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். சார்ஜர்சுடன் மோதிய ஆட்டத்தில் அல்பி மார்கெல் அடித்த ஹாட்ரிக் சிக்சர் செம ரகளை. கடைசி சிக்சர் வங்கக் கடலில் விழுந்ததாகக் கேள்வி. சார்ஜர்ஸ் இன்னிங்சில், சோகல் போட்டுத் தாக்கியபோது சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில். ஜகாதி, மார்கெல், போலிஞ்சர் கூட்டணி சூப்பராகப் பந்துவீசி அசத்தியதில் சார்ஜ் இறங்கியது சார்ஜர்ஸ்.
அடுத்த கோதா ராஜஸ்தான் ராயல்சுடன். மிரட்டிக் கொண்டிருந்த வாட்சனை போட்டுப் பிடித்தார் ஜகாதி. அதன் பிறகு ராயல்சால் எழுந்திருக்க முடியவில்லை. ஹஸி, ரெய்னா அதிரடியில் எதிர்ப்பே இல்லாமல் சரணடைந்தது ராயல்ஸ். சென்னையில் சாம்பியன் சிஎஸ்கே ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. அரை இறுதி, இறுதிப் போட்டியும் இங்குதான் என்பதால் சூப்பர் கிங்ஸ் உற்சாகம் கரை புரள்கிறது.
குறைந்தது 12 ஓவர் வரை களத்தில் நிற்க முயற்சிப்பேன் என்று சபதம் செய்த டேர்டெவில்ஸ் கேப்டன் சேவக் சாதித்துக் கொண்டிருக்கிறார். கொச்சிக்கு எதிராக 18வது ஓவர் வரை தாக்குப்பிடித்து 47 பந்தில் 80 ரன் விளாசியவர், ஐதராபாத்தில் சார்ஜர்சை உளுக்கி எடுத்துவிட்டார். டெல்லி துரத்தலின் 6வது ஓவரில் 25 ரன்னுக்கு 3 விக்கெட்அவுட். கண்ணுக்கெட்டாத தூரத்தில் 176 ரன் இலக்கு. மனம் தளராத விக்ரமனாய் வீறுகொண்டார் வீரு! சார்ஜர்ஸ் பந்துவீச்சை விரட்டி விரட்டி அடித்தார். ஒரு டஜன் பவுண்டரி, அரை டஜன் சிக்சரை பறக்கவிட்டவர் 48 பந்தில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்ய… அதிர்ச்சியில் உறைந்தது ஐதராபாத். ஒரே மிதியில் சச்சின், வல்தாட்டி, காலிஸ் எல்லோரையும் ஓவர் டேக் செய்து ரன் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறினார் சேவக். இந்த முறை அவர் 17வது ஓவர் வரை களத்தில் நின்று காட்ட… என்னடா இது புது தலை வலி என்று மற்ற அணிகள் கிலிபிடித்து நிற்கின்றன.
கொச்சி டஸ்கர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் அணிகளும் நம்பிக்கை குறையாமல் உற்சாகமாகவே உள்ளன. கிங்ஸ் லெவனுக்கு நிறைய லீக் ஆட்டங்கள் பாக்கி இருப்பதால் கில்கிறிஸ்ட் - வல்தாட்டி ஜோடி பாய்ச்சலுக்கு ஆயத்தமாக உறுமிக் கொண்டிருக்கிறது. யுவராஜின் புனே மட்டுமே பரிதாபத்துக்குரிய ஒரே அணியாக எக்சிட் கேட்டில். தொடர்ச்சியாக ஏழு தோல்வி என்றால் எழுந்திருப்பது எப்படி? என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்று புலம்புகிறார் யுவா. பெருங்காய டப்பா நெஹ்ராவுக்கு பதிலாக கங்குலியை துணை கேப்டனாக ஒப்பந்தம் செய்திருப்பது டூ லேட் என்றே தோன்றுகிறது.
‘கம் பேக் கிங்’ என்று தாதா நிரூபித்தாலும்… புனே அணியை பொருத்தவரை சீசன் 4 சேப்டர் குளோஸ்! கொல்கத்தா அரை இறுதிக்கு வெகு அருகே இருப்பதில் ஷாருக் கான் திருப்தியாக இருக்கிறார். டிவி ரேட்டிங்கில் ஐபிஎல் டைவ் அடித்திருந்தாலும், இண்டர்நெட்டில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஜிவ்வென 85 சதவீதம் எகிறியிருக்கிறது.
நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் யுடிஆர்எஸ் முறையை, ஐபிஎல் போட்டியில் அறிமுகம் செய்ய ஆதரவு அதிகரித்து வருகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சுதாரித்துக் கொள்ள அவகாசம் அதிகம். டி20ல் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே முடிந்து விடுகிறது. இதில் ஒரு தவறான முடிவு கூட ஆட்டத்தின் முடிவை அடியோடு மாற்றிவிடும் என்பதால், நாட்டாமை தீர்ப்பை மாற்றச் சொல்லி கேட்கும் உரிமை அவசியம் வேண்டும் என்கிறார் ஜெயவர்தனே.
உலக கோப்பை, ஐபிஎல்… என்று தொடர்ச்சியாக ஆடிக் கொண்டிருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எங்களுக்கு ஓய்வு கொடுங்கள் என்று சீனியர் வீரர்கள் கெஞ்சிக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் வாரியம் விடுவதாக இல்லை. ‘நல்ல பசங்க இல்ல… அங்கேயும் போய் ஆடிட்டு வந்துருங்க. நீங்க ஆடினாத்தான் விளம்பரம் கிடைக்கும், நாலு காசு பார்க்கலாம்’ என்று கொஞ்சிக் கொண்டிருக்கிறது. இப்படியே விளையாடிக் கொண்டிருந்தால் இந்திய வீரர்கள் தவழ்ந்துதான் போக வேண்டியிருக்கும். வாய்ப்புக்காக காத்திருக்கும் உத்தப்பா, வல்தாட்டி, ஜடேஜா, இர்பான், வேணுகோபால், ராயுடு, இஷாந்த் ஆகியோரை செலக்ட் செய்தால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு இந்த அணியே ரொம்ப அதிகம்! இப்படி வீரர்களை ரொட்டேட் செய்தால்தான் அவர்களும் எனர்ஜியோடு விளையாட முடியும். தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

பா.சங்கர்  

கலக்குறாங்க சென்னை பசங்க


அதிர்ஷ்டம் ஸ்டாக் அவுட் ஆயிடுச்சு… நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பேல் என்ற கணிப்பை வழக்கம் போலவே தகர்த்திருக்கிறார் டோனி. புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே 2வது இடத்துக்கு ஜம்ப் செய்ய, ‘எல்லாம் மச்சம்பா’ என்கிறார்கள் மீண்டும்!
பெரிய கனவோடுதான் சேப்பாக்கத்தில் கால் வைத்தது புனே வாரியர்ஸ். யுவராஜ் டாசில் ஜெயித்து சேஸ் செய்ய முடிவு செய்தது எதிர்பார்த்ததுதான். ஹஸி, விஜய், டோனி ஓரளவு தாக்குப்பிடிக்க சிஎஸ்கே 142 ரன் எடுக்க… வாரியர்ஸ் போட்டுத் தாக்கிவிடும் என்றே தோன்றியது.
உள்ளூர் ரசிகர்களின் உசுப்பேற்றலில் சிலிர்த்தது சூப்பர் கிங்ஸ். துல்லியமான பந்துவீச்சும் துடிப்பான பீல்டிங்கும் செம கிளாஸ். சூறைத் தேங்காய பொறுக்குற மாதிரி நம்ம பாய்ஸ் சும்மா பாய்ஞ்சு பாய்ஞ்சு புடிச்சத நம்பவே முடியவில்லை. யுவராஜ் மட்டும் கொஞ்சம் போராடி பார்த்தார். பாவம், சென்னையோட சூட்டில் தொங்கிப் போனவர் ‘முடியல’ என்று ஒதுங்கிக் கொண்டார். மார்க்கெல், போலிஞ்சர், அஸ்வின் பவுலிங் அற்புதமாக இருந்தது. நெருக்கடியான ஆட்டத்தில் வென்ற திருப்தி டோனி முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது ஆச்சரியம்! கேலரியில் திருமதி டோனியின் ஆர்ப்பாட்டம் அழகான அமர்க்களம்.
ஒரே நாள் இடைவெளியில் மீண்டும் வாரியர்சுடன் மோதல். இந்த முறை அவங்களோட குகையில். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் டீம்… சேப்பாக்கத்துக்கு வெளியே பாச்சா பலிக்காது என்ற அவப் பெயரை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்ற வெறியோடு விளையாடியது சிஎஸ்கே. யுவராஜ், உத்தப்பா அதிரடியில் வாரியர்ஸ் 141 எடுத்தது. சேசிங்கில் ஹஸி ஆரம்பத்திலேயே ஒதுங்கிக் கொண்டாலும் விஜய், பத்ரி, ரெய்னா அட்டகாசம் செய்தனர். பத்ரியோட அதிரடி ஆட்டம் யாருமே எதிர்பார்க்காதது. வீழ்வதெல்லாம் எழுவதற்கே என்று மீண்டும் நிரூபித்துள்ளது சிஎஸ்கே.
சீசன் 4 ரன் குவிப்பு டாப் 10ல் பத்ரி, விஜய் இடம் பிடித்திருப்பது பெரிய விஷயம். மற்ற அணிகளில் மும்பை இந்தியன்ஸ் டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறது. நான்காவது வெற்றிக்கு குறி வைத்த கொச்சி டஸ்கர்ஸ், இஷாந்த் புயலில் சிக்கி சின்னாபின்னமானது. டேர்டெவில்ஸ் நிலைமைதான் கவலைக்கிடம். எதுவுமே ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் சேவக். பின்தங்கியுள்ள அணிகள், இரண்டாவது பாதியில் ஈடுகட்டி விடலாம் என்ற நம்பிக்கையோடு உள்ளன.
தேர்வுகள் முடிந்து ஹாலிடே மூடு வந்திருந்தாலும், டிவி ரேட்டிங்கில் ஐபிஎல் சூடு பிடிக்காதது டூ மச் ஆப் கிரிக்கெட் என்ற சலிப்புணர்வை காட்டுகிறது என்றே தோன்றுகிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த சீசனை விட 22 சதவீதம் குறைந்திருக்கிறதாம். லீக் சுற்றின் கடைசி கட்டத்தில் இருந்துதான் ரசிகர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்கிறார்கள்.
‘ஒப்பந்தத்தில் இருப்பதை விட குறைவான போட்டிகளில் விளையாடுகிறோம். அதனால், முதல் ஆண்டுக்கான தொகையில் 75 சதவீதம் மட்டுமே கட்டுவோம்’ என்று புதிய அணிகளான புனே, கொச்சி முரண்டு பிடிக்க, அதெல்லாம் நடக்காது… முழுசா எடுத்து வையுங்க என்று கிரிக்கெட் வாரியம் கறாராக சொல்லி இருக்கிறது. இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்காக 10 இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உள்ளதால், அவர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்வதில் அணிகள் ரொம்பவே பிஸி. அரை இறுதி வாய்ப்பு யாருக்கு என்பதும் அடுத்த வாரத்தில் தெளிவாகி விடும்.

பா.சங்கர்