திருஷ்டி சுத்தி போடுங்கய்யா!
அசத்தலான கலைநிகழ்ச்சிகள், லேசர் ஷோ, வாணவேடிக்கை என்று வங்கதேச தலைநகர் தாக்காவில் உலக கோப்பை தொடக்க விழா அமர்க்களப் படுத்திவிட்டது. கேப்டன்களின் ரிக்ஷா பவனி செம ரகளை. சோனு நிகம், பிரையன் ஆடம்ஸ், ஷங்கர் மகாதேவன் இசை மழை அட்டகாசம். இனி கவனம் எல்லாம் ஆட்டத்தில் மட்டுமே.
இந்த முறை கோப்பை யாருக்கு? என்ற கேள்விக்கு, எல்லா கருத்து கணிப்புசாமி!களும் இந்தியாவை கை காட்டி இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் உதறலும் இருக்கத்தான் செய்கிறது. ஓவர் கான்பிடன்ஸ் கவிழ்த்துவிடக் கூடாதே என்ற கவலைதான்.
பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை பதம் பார்த்ததுமே இந்திய அணியின் ரேட்டிங் டபுளாகிவிட்டது. பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் அசத்த, சேப்பாக்கத்தில் நியூசிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர். சச்சின், சேவக், பதான் கணிசமாக ரன் அடிக்காமலேயே ஸ்கோர் 350ஐ தாண்டியதில் எல்லா அணிகளுமே அரண்டு போய்விட்டன. பந்துவீச்சு, பேட்டிங் இரண்டுமே கிளிக் ஆனதில் பரம திருப்தி.
ரொம்ப நாளைக்குப் பிறகு கேப்டன் டோனி தனது அதிரடி ஆட்டத்தை ரீவைண்ட் செய்து நடுவரிசைக்கு வலு சேர்த்திருக்கிறார். பிளேயிங் லெவனில் யாரை சேர்ப்பது யாரை கழட்டி விடுவது என்பதுதான் டோனிக்கு ஒற்றை தலைவலி. இதில் ரெய்னாவை ஓவர்டேக் செய்திருக்கிறார் கோஹ்லி. தலா 2 வேகம், 2 சுழல் ஸ்பெஷலிஸ்டுகளுடன் யுவா, பதான், சேவக், சச்சினை வைத்து எஞ்சிய 10 ஓவர்களை சமாளித்து விடலாம் என்பதால் டோனி உற்சாகமாக இருக்கிறார்.
நம்ம அஷ்வின் ஆல்-ரவுண்டராக அசத்துவதால் டோனிக்கு அவர் மீது அலாதி பிரியம். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கவும் தயார் எனத் தெரிகிறது. போட்டுத் தாக்கத் தொடங்கியிருக்கும் டோனி & கோவுக்கு இப்போதே திருஷ்டி சுற்றிப் போடுவது நல்லது. லீக் சுற்றில் கொஞ்சம் சறுக்கினாலும் சுதாரித்துக் கொள்ள ஏராளமான வாய்ப்பு இருப்பதால் பெரிய அணிகள் ரிலாக்சாக இருக்கின்றன. கற்றுக் குட்டிகளிடம் உதை வாங்காமல் சமாளித்துவிட்டாலே கால் இறுதி உறுதி.
வழக்கம் போல எக்கச்சக்கமான சாதனைகள் சச்சினைத் துரத்துகின்றன. படித்துக் கொண்டிருக்கும் போதே, உலக கோப்பையில் அதிக சதம், 2000 பிளஸ் ரன் குவிப்பு என்று செய்தி பிளாஷ் ஆகும் வாய்ப்பு அதிகம். இந்திய அணியை பொருத்தவரை பேஸ்மெண்ட் செம ஸ்ட்ராங்! பில்டிங்கையும் அப்படியே எழுப்பிவிட்டால் கோப்பையில் பால் காய்ச்சி விடலாம்.
- பா.சங்கர்
(குங்குமம் இதழில் வெளியானது)